கடந்த 2 ஆண்டுகளாக பதிவி ஏற்காமல் இருக்கும் தலைவருக்கு உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைக்கக் கோரி மனு திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலைக்கிராம ஊராட்சிக்குட்பட்ட காமனூர் தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி இந்துமதி. இந்த நிலையில், கடந்த 2021 ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி பகுதி பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதால், பாண்டியன் தனது மனைவி இந்துமதியை நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்குப் போட்டியிட வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, பிற சமூகத்தினர் அதிகம் உள்ள நாயக்கனேரி ஊராட்சியில் பட்டியலின பிரிவினருக்குத் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டத்தைக் கண்டித்து நாயக்கனேரி பஞ்சாயத்தைச் சேர்ந்த சிலர் இந்துமதி தலைவர் பதவிக்குப் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்துமதியை எதிர்த்து யாரும் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்குப் போட்டியிடாத காரணத்தால், இந்துமதி போட்டியின்றி நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து, நாயக்கனேரி பஞ்சாயத்தைச் சேர்ந்த சிலர் பாண்டியன் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அனைவருக்கும் அப்பகுதியில் எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்துமதி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் நாயக்கனேரி பஞ்சாயத்தைச் சேர்ந்த சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், அந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் முடிவுற்றுத் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி இந்துமதி நாயக்கனேரி பஞ்சாயத்து தலைவராகப் பதவியேற்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை எதிர்த்து நாயக்கனேரி பஞ்சாயத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சிவக்குமார் மேல்முறையீடு செய்தார்.
ஆனால் அந்த மேல்முறையீடு வழக்கிலும் இந்துமதி தலைவர் பதவியேற்க இடைக்காலத் தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. மேலும் நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்காமல், கடந்த 1 ஆண்டுகளாகப் பாண்டியனின் குடும்பத்தினரை நாயக்கனேரி பஞ்சாயத்தைச் சேர்ந்த சிலர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நிலையில், பாண்டியனின் உறவினர்கள் மலைக் கிராமத்தை விட்டு வெளியேறி வெளியூர்களுக்கு வேலைக்காகச் சென்றுள்ளனர்.
மேலும் பாண்டியன் தனது மனைவி இந்துமதி மற்றும் இரு ஆண் பிள்ளைகளுடன் மலைக்கிராமத்தை விட்டு ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (செப்.9) அன்று இந்துமதி கடைக்குச் சென்று வருவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் வெகுநேரமாகியும் இந்துமதி வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பாண்டியன் பல இடங்களில் தேடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை இந்துமதி காணாதது குறித்தும், நாயக்கனேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் இந்துமதியின் கணவர் பாண்டியன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் அன்று இரவே இந்துமதி ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு வந்து தனக்கு நாயக்கனேரி பஞ்சாயத்துத் தலைவர் குறித்து அதிக மன அழுத்தம் இருந்ததாகவும், இதனால் பல கட்ட பிரச்சனை சந்தித்து வருவதால் மன உளைச்சலில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
மேலும் இந்நிகழ்வு குறித்து இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட சமூக நீதி மறுப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு சார்பில், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவரான இந்துமதி உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட தேர்தல் ஆணையம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் உயர் அதிகாரிகளுக்கு இந்துமதிக்குப் பஞ்சாயத்துத் தலைவராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்காதது குறித்து முறையாக மனுத் தாக்கல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினரிடம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இச்செயலானது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டத்திற்கும் எதிராக இருப்பதாகவும், எனவே இந்துமதி பாண்டியனை நாயக்கனேரி ஊராட்சிமன்ற தலைவராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் எனத் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் சமூக நீதி மறுப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: "ஈபிஎஸ் பினாமி உள்ளிட்டோரின் பெயர்களையும் கூறியுள்ளேன்” - கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் பரபரப்பு பேட்டி!