அமைச்சர் மா சுப்பிரமணியன் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 8.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆய்வக திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆய்வகத்தைத் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஓமைகாரன் தொற்று பரவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "கேரள மாநிலத்தில் தற்போது புதிய வகை ஓமைகாரன் தொற்று பரவி வருகிறது. ஆனால் இந்த வைரஸ் தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இருந்த போதிலும் தமிழ்நாட்டில் இந்த ஓமைக்காரன் தொற்று 20 நபர்களுக்கு மட்டும் இருப்பது தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த புதிய வகை தொற்றைத் தடுக்கும் வகையில் கேரள மாநில எல்லைப் பகுதிகளில் தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
மேலும் இதன் தொடர்ச்சியாகத் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அந்த கேள்விக்குப் பதில் வழங்கிய அமைச்சர், "தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறையாக உள்ள மருத்துவர்கள் காலி பணியிடங்களுக்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்கள் மட்டும் அல்லாது மருந்தாளுநர்கள் மற்றும் செவிலியர்கள் என விரைவில் பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.
கரானோ நேரத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வேண்டும் எனவும் வழங்கக் கூடாது எனவும் பல தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்ததால் காலதாமதம் ஏற்பட்டது. அதற்கான தீர்வும் உடனடியாக எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திட்ட இயக்குநர் செல்வராசு மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அதிகரித்து வரும் புதியவகை கரோனா தொற்று.. உலக சுகாதார அமைப்பு எச்சரிப்பது என்ன?