திருப்பத்தூர் மாவட்டம் செட்டேரி கிராமத்தில் புதிய தொடக்கப்பள்ளியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி இன்று (பிப்.20) தொடங்கி வைத்து மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.
அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது, "இந்த ஆண்டு 25 புதிய தொடக்கப்பள்ளிகளை அரசு தொடங்கியுள்ளது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில், நான்கு பள்ளிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் கூடுதல் கட்டடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.