திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சந்தைமேடு பகுதியில் வாரச்சந்தை, உழவர் சந்தை, காய்கறிச்சந்தை, மாட்டுச்சந்தை ஆகிய சந்தைகளும், தேநீர் கடை, உணவகம், ஆவின் பாலகம், ஆகியவை இயங்கிவந்தன. இப்பகுதியில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடை நடத்திவந்தனர்.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் வாரச்சந்தை, காய்கறிச்சந்தை உள்ளிட்ட அனைத்துச் சந்தைகளும், புதூர் பகுதியில் உள்ள கூடுதல் பேருந்து நிலையம், தனியாருக்குச் சொந்தமான இடங்களில் தற்காலிகமாகச் சந்தைகள் மாற்றப்பட்டன.
புதிய இடங்களுக்கு மாற்றப்பட்ட காய்கறிச்சந்தை, வாரச்சந்தைகளில் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் நடைபெறாமல், கூடுதல் பேருந்து நிலையத்தில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுவந்ததால், பழையபடி சந்தைமேடு பகுதியிலேயே காய்கறிச்சந்தை, வாரச்சந்தை உழவர் சந்தை அமைத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என வாணியம்பாடி வியாபாரிகள் சார்பில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து பழையபடி வியாபாரிகள் கடைகள் அமைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யும்படி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணித்திற்கு மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவிட்டார்.