திருப்பத்தூர்:வாணியம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் மாணவிகளுக்கான அரசு சிறுபான்மையினர் நல விடுதியில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இன்றி மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் ஜீவா நகர் பகுதியில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கான அரசு சிறுபான்மையினர் நல விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. வாணியம்பாடியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் வெளி மாவட்டங்கள் மற்றும் வாணியம்பாடியைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து வரும் மாணவிகள் இந்த விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதியில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி தினமும் அவதிப்பட்டு வருவதாக மாணவிகள் தரப்பில் இருந்து அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும், விடுதியில் போதிய உணவு வழங்கப்படுவதில்லை எனவும், தண்ணீர் விலை கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகளை மாணவிகள் முன் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியை தகாத முறையில் திட்டியதாக புகார்.. வருத்தம் தெரிவித்த சுகாதாரத்துறை அதிகாரி!
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஓ.எம்.பிரகாசம் மற்றும் மாணவிகளின் பெற்றோர் இணைந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு இது குறித்து புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
இதன் அடிப்படையில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜராஜன் விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்விற்காக விடுதிக்குச் சென்ற போது 50 மாணவிகள் தங்கி இருக்கக்கூடிய அந்த விடுதியில், 7 பேர் மட்டுமே தங்கி இருந்துள்ளனர். அப்படி தங்கியிருந்த 7 மாணவிகளுக்கும் சரியான உணவு வழங்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், விடுதியில் 50 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக கணக்கு காண்பிக்கப்பட்டு இருந்ததும், விடுதியில் முறையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆய்வுக்குப் பின்னர் இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுமனை பட்டா வழங்காததால் பள்ளி மாணவர்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்!