திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தில் வசிப்பவர் வேடி என்பவரின் மகன் நாராயணசாமி. சுதந்திர போராட்ட தியாகியான இவர், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இன்று அவர் வீட்டின் முன்பு ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக மகாத்மா காந்தி பல மாநிலங்களுக்குச் சென்று சுதந்திரப் போராட்டம் செய்வதற்காக கூட்டங்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் திருப்பத்தூருக்கு வரும்பொழுது, நானும், எனது தகப்பனாரும் அவரை காணச் சென்றிருந்தோம். கூட்டத்திற்கு சென்றால் தங்களை கைது செய்வார்கள் என்ற பயத்தில் பலரும் அக்கூட்டத்திற்கு வரவில்லை. 13 அல்லது14 பேர் மட்டுமே அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
அச்சமயத்தில் நான் சிறுவனாக இருந்தேன். காந்தி என்னைத் தட்டிக்கொடுத்து இந்த நாட்டுக்காக நீதான் போராட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அன்று முதல் மகாத்மா காந்தி அவர்களுடைய பாதையில் நானும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டேன். கடைசியாக 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்றது. அந்த இயக்கத்தில் நானும் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றேன்.
அப்போது, என்னை வேலூர் சிறையில் அடைத்தார்கள். அந்த சிறைகள் 4அடி உயரம் மட்டுமே இருக்கும். வேறு எந்த அடிப்படை வசதிகளும் இருக்காது. உணவு உண்பதற்கு ஒரு உருண்டை களி, ஒரு சொம்பு தண்ணீர் கொடுப்பார்கள் அந்த ஒரு சொம்பு தண்ணீரிலேயே முகம் கழுவவேண்டும். குடிக்கவேண்டும். கழிவுகளை கழிக்க பயன்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட பல இன்னல்களை சந்தித்தோம்.