திருப்பத்தூர்:திருப்பத்தூரை அடுத்த அனுமந்த உபாசகர் தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த சுகேஷ் (19) என்ற வாலிபரும், ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், அனுமந்த உபாசகர் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் கார்த்திக் (18), ஒரு தலைப்பட்சமாக அந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அதன் காரணமாக கடந்த 8ஆம் தேதி சுகேஷ், கார்த்திக்கின் வீட்டிற்குச் சென்று தான் அந்த 16 வயது சிறுமியை காதலித்து வருவதாகவும், ஆகையால் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், அவருடைய தந்தை செல்வம் (38) மற்றும் அவருடைய கூட்டாளிகள் பாலாஜி (20), தருமன் (25), முத்து (26) ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து, கட்டையால் சுகேஷை சாரமாரியாக தலையில் தாக்கி உள்ளனர்.
இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே விழுந்த சுகேஷை மீட்ட அக்கம் பக்கத்தினர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (நவ.13) சுகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.