தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்து அதிகாரி போல் நடித்து வசூல் வேட்டை... போலி போக்குவரத்து அதிகாரி கைது!

Fake RTO arrest in Vaniyambadi: வாணியம்பாடி அருகே போக்குவரத்து அதிகாரிபோல் நடித்து தனியார் பெண்கள் கல்லூரி வாகனம் மற்றும் பள்ளி வாகனங்களுக்கு அபராதம் விதித்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வாணியம்பாடியில் போலி போக்குவரத்து அதிகாரி கைது!
வாணியம்பாடியில் போலி போக்குவரத்து அதிகாரி கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 2:19 PM IST

போலி போக்குவரத்து அதிகாரி கல்லூரி வாகனத்தில் ஆய்வு செய்துவிட்டு இறங்கிய சிசிடிவி

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் இயங்கி வரும் தனியார் பெண்கள் கலைக் கல்லூரியின் வாகனம் ஒன்று திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, வக்கணாம்பட்டி என்ற பகுதியில் கல்லூரி வாகனத்தை நிறுத்திய நபர் ஒருவர், தன்னை வட்டார போக்குவரத்து அதிகாரி எனக் கூறி உள்ளார்.

இதனையடுத்து, அந்த கல்லூரி பேருந்தில் ஏறிய அந்த நபர், பொன்னேரி வரை கல்லூரிப் பேருந்தில் பயணம் செய்தது மட்டுமல்லாமல், கல்லூரிப் பேருந்தை ஆய்வு செய்வது போல் நடித்து, பின்னர் கல்லூரி பேருந்திற்கு அபாரதமும் விதித்து உள்ளார். அதே போன்று, கலந்திரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அதே நபர் வட்டார போக்குவரத்து அதிகாரிபோல் நடித்து பள்ளி வாகனங்களையும் சோதனை செய்து உள்ளார்.

அப்போது சந்தேகம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக அந்த நபரை புகைப்படம் எடுத்து வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணனிடம் புகார் அளித்து உள்ளனர். உடனடியாக, வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் அந்த நபர் போலி என தெரிவித்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் குழுவினர், தனியார் பள்ளியில் போக்குவரத்து அதிகாரிபோல் நடித்த நபரை பிடித்து உள்ளனர். பின்னர், அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் மதுரையைச் சேர்ந்த செல்வகுமார் என்பது தெரிய வந்து உள்ளது. மேலும், அவர் கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் நகர் பகுதியில் தங்கும் விடுதியில் வாடகைக்கு தங்கி இருந்து உள்ளார்.

மேலும், இவர் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் இருசக்கர வாகன விற்பனை மையங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரி போல் நடித்து அபராதம் விதித்ததும், அந்த வகையில் இன்று (ஆகஸ்ட். 28) திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் சாலையை ஒட்டிய பள்ளிகளில் போக்குவரத்து அதிகாரி போல் நடித்து அபராதம் விதித்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், பிடிபட்ட செல்வகுமார் தனியார் பள்ளியில் வாகனங்களை சோதனை செய்வது போன்ற சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து செல்வகுமாரை போக்குவரத்து அதிகாரிகள், வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். செல்வகுமாருடன் சேர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் போல் நடித்த சில நபர்களை வாணியம்பாடி போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த பயணி - காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details