வேலூரில் இருந்து (விழுப்புரம் கோட்டம்) ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தை அணைக்கட்டு ஊசூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்பேருந்து 35 பயணிகளுடன் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் சங்கருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக அறியமுடிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தறிகெட்டு தாறுமாறாக ஓடியது.
உடனடியாக நிலைமையை உணர்ந்த அணைக்கட்டு ஊசூரைச் சேர்ந்த நடத்துநர் வேலு சமயோஜிதம் சிந்தித்து, பேருந்தின் பிரேக்கை அழுத்தி சாவியின் மூலம் பேருந்தை ஆப் செய்து நிறுத்தினார். இதனால், பேருந்து சாலையின் எதிர்பக்கம் பேருந்து செல்லாமல், அருகில் இருந்த கம்பத்தின் மீது மோதி, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் முட்டி நின்றது.
பேருந்து தடுப்பு சுவரின் மீது நின்றதால், அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு படுகாயமும் இன்றி உயிர் தப்பினர்.