திருப்பத்தூர்:தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நகர்ப்புற தேர்தலுக்காக திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி 35ஆவது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கதிர் அரிவாள் சின்னத்தில் விஜி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியிடுகிறார்.
இதன் காரணமாக திருப்பத்தூருக்கு வருகைபுரிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் 5 மணியளவில் வேட்பாளர் விஜிக்காக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிலையில் முன்னதாக முத்தரசன் செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளரின் கேள்விகளுக்குப் பதிலளித்த முத்தரசன், “திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மிகவும் திருப்தியளிக்கிறது. ஆனால் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 171 வார்டுகளில் திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 35ஆவது வார்டில் ஒரு இடம் மட்டும் ஒதுக்கப்பட்டது.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றிவருகிறது. வடகிழக்குப் பருவமழை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசின் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு விரைந்து டெல்டா பாதிப்பை பார்வையிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்து நிதி வாங்கித் தருவதாக உறுதியளித்தனர்.
ஆனால், தமிழ்நாடு அரசு பாதிப்பின் காரணமாக சுமார் இரண்டாயிரத்து 600 கோடி ரூபாயைக் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால் மத்திய அரசோ சொற்ப தொகையை மட்டும் கொடுத்துள்ளது. பின்னர் எந்த அலுவலகம் மீதும் யார் வன்மம் நடத்தினாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது, தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்திப் பேசுவது வன்முறை செய்வது கண்டிக்கத்தக்கது.