திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தை சேர்ந்த 45 பேர், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி 2 வேன்களில் கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவிற்கு சுற்றுல்லா சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று (செப். 11) அதிகாலை சுற்றுலாவை முடித்துவிட்டு அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது, நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா சென்ற வேன் பஞ்சர் ஆகி நின்றுள்ளது.
அதைத் தொடர்ந்து வேன் ஓட்டுநர், பஞ்சர் ஆன வேனை சாலையிலேயே நிறுத்தியிருந்த நிலையில், வேனில் இருந்தவர்களும் சாலையிலேயே நின்றுள்ளனர். அப்பொழுது அதே சாலையில் வேகமாக வந்த மினி லாரி, பஞ்சரான வேன் மற்றும் சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி, எதிர் சாலையில் கவிழ்ந்தது.
நாட்றம்பள்ளி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணத் தொகை அறிவிப்பு இந்த கோர விபத்தில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் உதவி மூலம் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, வாணியம்பாடி, நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதன் பின்னர் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டதில், விபத்தில் உயிரிழந்த பெண்கள் மீரா (51), தெய்வானை (32), சேட்டாம்மாள் (55), தேவகி (50), சாவித்திரி (42), கலாவதி (50) ஆகியோர் என்பது தெரியவந்து உள்ளது. மேலும் ஒருவரது சடலம் மட்டும் அடையாளம் காணப்படாத நிலையில் அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட விசாரணையில் ஈடுபட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
நாட்றம்பள்ளி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணத் தொகை அறிவிப்பு இந்நிலையில், கர்நாடக மாநிலத்திற்கு சுற்றுலா சென்று வீடு திரும்பிய நிலையில், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு, ரூபாய் ஒரு லட்சமும் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சாலையோரம் நின்ற வேன் மீது மினி லாரி மோதி கோர விபத்து - 7 பெண்கள் பலி!