திருப்பத்தூர்:தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதிகாரத்தில் இருக்கும் சில நபர்களின் கவனக்குறைவே இத்தகைய சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கக் காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆம்பூர் நகர மற்றும் கிராமிய பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் பாலாற்றில் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வரும் கட்டவாரபல்லி பகுதியைச் சேர்ந்த தலைமைக்காவலர் சீனிவாசன் என்பவர், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்காமல் அவர்களிடம் பணம் கேட்கும் ஆடியோ ஒன்று சமூக வளைதளங்களில் பரவி வைரலாகி வந்தது.
அந்த ஆடியோவில், தலைமைக்காவலர் மணல் கொள்ளையரிடம், பீட் பணம் இன்னும் கொடுக்கவில்லையாமே? என்றும் பீட் பணம் குறைவாக கொடுத்தால் இன்ஸ்பெக்டர் மொத்த வண்டியையும் நிறுத்திவிடுவார் எனவும் காவலர் சீனிவாசன் கறாராகப் பேசும் ஆடியோ வைரலாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி வந்தது.
இதைதொடர்ந்து, மணல் கடத்தலில் ஈடுபடுவோரை தடுக்கும் இடத்தில் இருக்கும் காவல் துறை அதிகாரியே கடத்தலுக்கு உடந்தையாக செயல்படுகிறார் என தலைமைக்காவலர் மீது உயர் அதிகாரிகள் துறை சார்ந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.