திருப்பத்தூர்: அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வதில், காவல் துறை ஆளும் கட்சியான திமுகவினருக்கு சாதகமாக இருந்துகொண்டு நடவடிக்கை எடுக்க மறுப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆரிப் நகரைச் சேர்ந்த சவுகத் அலிகான் மகன் சாதிக் அலி (24). இவர் தனது குடும்பத்துடன் காரில் இன்று (மே 14) கிருஷ்ணகிரி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் கோட்டத்திற்குட்பட்ட அரசு போக்குவரத்து பேருந்தை ஓட்டுநர் பெரியசாமி ஓட்டி வந்துள்ளர். இதற்கிடையே சாதிக் அலி என்பவர் காரில் ஒரு வழிப்பாதையில் வந்ததைத் தொடர்ந்து, எதிரே வந்த அரசு பேருந்து மீது உரசி விபத்து ஏற்பட்டது.
இதனால், பேருந்தின் ஓட்டுநரான பெரியசாமிக்கும் காரின் ஓட்டுநரான சாதிக் அலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சாதிக் அலி அரசு பேருந்து ஓட்டுநர் மீது அப்பகுதியில் இருந்த அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால், திமுக பிரமுகர்கள் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறை கண்துடைப்பு செய்வதாகவும், திமுக அரசியல் பிரமுகர்கள் தலையீட்டால் காவல் துறை தடுமாறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
திருப்பத்தூரில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற அன்றே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஓட்டுநரை தாக்கிய குற்றவாளி தன் கண்முன்னே இருந்தும் அவர்களை பிடிக்காமல் காவலர்கள் பாதுகாப்புடன் தப்பிக்க வைத்துவிட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜான் பாஷா (55) என்பவரை மட்டும் கைது செய்த நிலையில் சாகித் அலி, அனிஷா, அப்ரார், தௌஷிக், லட்டும், கலிபுல்லா, சௌகித் அலி உள்ளிட்ட 17 குற்றவாளிகளை திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் தலைமையில் வலைவீசி தேடி வருவதாக கூறிவருகின்றனர். ஆனால், ஆளும் அரசியல் பிரமுகர்களுக்கு சட்டம் துணை போவதால் 17 குற்றவாளிகளும் சட்டத்தின் துணையுடன் தலைமறைவாகியுள்ளனர் என்றும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். மேலும், ஒரு அரசு ஊழியருக்கே இந்த அவல நிலை என்றால் பொதுமக்களின் கதி என்ன? என்றும் திமுக பிரமுகர்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்றால், ஏன் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார்கள்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
திருப்பத்தூர் நகரத்தை பொருத்தவரையில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுபோன்ற வன்முறைக்கு ஆதரவான போக்கு அடுத்தடுத்து நடைபெற்று வருவதும் அதை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவர்களுடைய கண்கள் மக்கள் விரோத செயலுக்கு ஆதரவாக கருப்பு துணியில் கட்டப்பட்டிருக்கிறதா? என்றும் அடுக்கடுக்கானக் கேள்விகளை முன்வைக்கின்றனர்.