தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.15 கடன்.. மகன் கண்முன்னே தந்தை மீது தாக்குதல்.. உயிரிழந்தவருக்கு நீதி கேட்டு சாலை மறியல்! - Tirupattur News

Ambur death: ஆம்பூர் அருகே குமாரமங்கலத்தில் 15 ரூபாய் கடனுக்காக, மகன் கண் முன்னே தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் காயமடைந்தவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Attack on father in front of son near Ambur Relatives blocked the road after the person died
உயிரிழந்தவரின் உறவினர்கள் சாலை மறியல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 7:02 PM IST

உயிரிழந்தவரின் உறவினர்கள் சாலை மறியல்

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், ஞானசேகரன். இவர் அதே பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, சட்ட விரோத ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து, நடமாடும் பெட்டிக்கடை போல் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதே பகுதியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஞானசேகரிடம் சென்று ஹான்ஸ் வாங்கிக் கொண்டு, அதற்கான பணமான 15 ரூபாயை பின்னர் தருவதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செல்வத்தின் மகனான சுரேஷ்குமார் மற்றும் அவரது மகனும், நேற்று இரவு அப்பகுதியில் உள்ள கடைக்கு காய்கறி வாங்குவதற்காக சென்றுள்ளனர்.

அப்பொழுது அங்கு சுரேஷ்குமாருக்கும், ஞானசேகருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஞானசேகர், சுரேஷ்குமாரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்நிலையில், சுரேஷ்குமார் படுகாயமடைந்த நிலையில், அவரை மீட்ட அப்பகுதி மக்கள், அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர், சுரேஷ்குமாருக்கு தலையில் அதிக அளவு காயம் ஏற்பட்டிருப்பதாக கூறிய மருத்துவர்கள், அவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ்குமார், இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுரேஷ்குமாரை தாக்கிய ஞானசேகரை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி, சுரேஷ்குமாரின் உறவினர்கள், உதயேந்திரம் - பேர்ணாம்பட் சாலையில் கற்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் (பொறுப்பு) வாணியம்பாடி கோட்டாச்சியர் பானு ஆகியோர், மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, சுரேஷ்குமாரின் மனைவி, ஒரு மகள், ஒரு மகன் ஆகியோர் அதிகாரிகளின் காலில் விழுந்து, தனது தந்தையை கொன்றவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதறி அழுதனர். இதனைத் தொடர்ந்து சுரேஷ்குமாரை கடுமையாக தாக்கி கொலை செய்த ஞானசேகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சுரேஷ்குமாரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் உத்தரவு அளித்ததன் பேரில், சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் உதயேந்திரம் - பேர்ணாம்பட் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து ஏற்பட்டது. 15 ரூபாய் கடனுக்காக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் கூட்டாளி மாதவன் வெட்டி கொலை!

ABOUT THE AUTHOR

...view details