திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ சமய வல்லி அம்பாள் உடனுறை நாகநாதசுவாமி திருக்கோயிலில் இன்று (மார்ச் 10) குடமுழுக்கு நடைபெற்றது.
புதிய சப்ர தேர் அர்ப்பணிக்க தொழிலதிபர் தண்டபாணி குழுவினர் தாமாக முன்வந்து, பொதுமக்கள் நிதி உதவியுடன் சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய சப்ர தேர் தஞ்சாவூர் சிற்பிகளால் செய்யப்பட்டு முடிவுற்ற நிலையில், கடந்த மாதம் சிறப்பு பூஜைகள் செய்து மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் முன்னிலையில் தேர் வெள்ளோட்டத்தினை தொடங்கிவைத்தனர்.
நாகநாதசுவாமி கோயில் குடமுழுக்கு இந்தநிலையில் இன்று (மார்ச் 10) சப்ர தேருக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு, மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் அகோர கிருஷ்ணமூர்த்தி குருக்கள் தலைமையில் கணபதி ஹோமம், கலச பூஜை, கோ பூஜை, யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளைத் தொடர்ந்து மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதில் கலசநீர் கோயில் சுற்றி ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு சப்ர தேர் கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் மாலையில் தேர் திருவீதி உலா நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள் ஏ.பி. மனோகர், மார்கபந்து உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்செய்தனர்.