திருப்பத்தூர்:ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப படிவம் பெறும் முகாமினை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார்.
அப்போது விண்ணப்பம் படிவம் பூர்த்தி செய்யும் பணியாளர்களிடம், ”மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் பெறும் பெண்களுக்கு, இது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழங்கும் பணம் என்பதை ஒவ்வொருவருக்கும் சொல்லி சொல்லி கொடுங்கள் முதலமைச்சர் பெயரை சொல்வதில் தப்பில்லை” என தெரிவித்தார்.
மேலும் பொதுமக்களிடையே பேசிய அவர், ”அரசாங்க அதிகாரி குடும்பத்தினரோ அல்லது அரசியல்வாதி குடும்பத்தினரோ இந்த உரிமை தொகையை பெற முடியாது. தகுதியுடைய பாமர மக்கள் பயன் பெறவே இந்த மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. அதனை ஆய்வு செய்யவே நான் இங்கு வந்துள்ளேன்” என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் விழாவில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்கிற திட்டத்தை நிறைவேற்றுவோம் என குறிப்பிட்டார். அந்த வகையில் எல்லாம் முறையாக தகுதியுள்ளவர்களுக்கு மனுக்கள் சேர்ந்துள்ளதா? அதில் முறையாக பதிவு செய்கிறார்களா, என தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் பணிகளை செய்கின்றார்களா என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.