திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் மனோஜ்குமார். திருப்பத்தூர் கச்சேரித் தெருவில் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டுடன் கிளினீக் ஒன்றையும் நடத்திவருகிறார். இவருடைய மனைவி மருத்துவ படிப்பிற்காக வெளியூரில் தங்கியுள்ளார்.
மருத்துவர் மனோஜ் கோட்டைத் தெருவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் நட்புறவுடன் பழகியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனோஜை சந்திக்க அப்பெண் அடிக்கடி கிளினீக்கிற்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மனோஜின் மாமனார் ரவிக்கு தெரியவரவே, விசயம் விஷமமானது.
’கிளினீக்கிற்கு சென்ற பெண்ணுடன் மருமகனுக்கு தொடர்பா? ’ சந்தேகப்பட்டு கதவை பூட்டிய மாமனார்! அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றும் ரவி திருப்பத்தூரில் பல அரசியல் தொடர்புகளை உடையவர். இந்நிலையில் மருமகனின் விவகாரத்தை கையும் களவுமாக பிடித்து அம்பலமாக்க முடிவுசெய்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் மனோஜுடன், சம்மந்தப்பட்ட பெண் பேசிக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து கிளினீக்கை வெளிப்பக்கமாக பூட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனக்கு நெருக்கமான அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அழைப்புவிடுத்தார்.
இந்த அழைப்பையேற்று 150 பேர் கிளினிக் முன்பு கூடினர். இதன் பின்னர் கதவு திறக்கப்பட்டு, அனைவரும் உள்ளே சென்றனர். ஆனால் அந்த பெண்ணிடமோ, மருத்துவரிடமோ யாரும் பேச முனையவில்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என உள்ளேயிருந்த பெண்ணை சரமாரியாக தாக்கினர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதிகாரத்திற்கு மத்தியில் காவல்துறையினரும் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பதிவாகியுள்ள வீடியோவில், இவ்விகாரத்தில் தொடர்புடைய பெண்ணுக்கு அங்கிருந்த மற்றொரு பெண் பரிந்து பேசுகிறார்.
ஆனால் அங்கிருக்கும் யாருக்கும் இது குறித்து கிஞ்சித்தும் அக்கறையில்லை என்பதை புரிந்து கொண்ட பாதிக்கப்பட்ட பெண், ‘ஹே ஷட் அப், விடு’ என விரக்தியின் உச்ச தொனியில் கத்துகிறார். அரசியல் கட்சியினர் தொடர்ந்து அந்தப் பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்தப் பெண்ணிடம், “மருத்துவர் மனோஜ் குமாருக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என எழுதி வாங்கப்பட்டது. நள்ளிரவு 12 மணி வரை கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றுள்ளது. அதன்பிறகே அந்தப் பெண்ணை விடுவித்தனர். வீட்டிற்கு செல்லும் வழியிலும் அந்த பெண்ணை அரசியல் பிரமுகர்கள் விடாமல் தாக்கியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கவில்லை. காவல்துறையினரும் புகாரை பெறும் நோக்கத்தில் இல்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆயுத காவல் படையினர் சென்ற வாகனம் விபத்து!