திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலால் 5 வயது பெண் குழந்தை உயிரிழப்பு திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 45) சுமித்ரா (வயது 35) ஆகிய தம்பதியினருக்கு பிரிதிக்கா (வயது 15) தாரணி (வயது 13) யோகலட்சுமி (வயது7) அபிநிதி (வயது 5) மற்றும் புருஷோத்தமன் என்ற எட்டு மாத கைக்குழந்தையுடன் சேர்த்து மொத்தம் ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் மணிகண்டன் உயிரிழந்து விட்ட நிலையில் இவருடைய மனைவி சுமித்ரா ஐந்து குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். இந்த சூழலில் யோகலட்சுமி, அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகிய குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 23ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் யோகலட்சுமி மட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து தற்போது பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகிய இரண்டு குழந்தைகளும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். இந்த நிலையில் நேற்று (செப். 27) இரவு அபிநிதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் புருஷோத்தமன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு அதில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:World Rabies day: ரேபிஸ் நோயை தடுப்பது எப்படி? - மருத்துவரின் முழு விளக்கம்!