நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள முத்துசாமிபுரம் கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு குமார் என்ற ஒரு இளைஞர் அறிமுகமாகியுள்ளார். தன்னை, தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் வங்கியின் அலுவலராக அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், "நான் பணிபரியும் வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடன் வழங்கப்பட உள்ளது. இந்த கடனை பெற்றுக் கொண்டு மாதம் ரூ.3150 வீதம் 40 மாதங்களுக்கு தவணை தொகையை செலுத்தினால் போதும். இந்த கடன் திட்டம் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், தேர்தலையொட்டி இந்த கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துவிடும் வாய்ப்பும் உள்ளது" என்று கூறி ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
கிராம மக்களிடம் பண மோசடி செய்த இளைஞர்: போலீஸ் வலைவீச்சு! - காவலர்
தூத்துக்குடி: மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கிராம மக்களிடம் வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதை உண்மை என்று நம்பிய அந்த கிராமத்தை சேர்ந்த 50 பேர், நேற்று இரண்டு வேன்களை பிடித்துக்கொண்டு கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூர் பகுதியில் உள்ள வங்கிக்கு செல்ல புறப்பட்டுள்ளனர். அப்போது அவர்களை செல்போனில் தொடர்பு கொண்ட பேசிய குமார், இளையரசனேந்தல் ரோடு சந்திப்பு அருகே உள்ள காளியம்மன் கோவிலுக்கு வந்த தன்னை சந்திக்குமாறு கூறி அவர்களை அங்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த அவர்களிடம், 20 பேரிடம் தலா ரூ.1500-மும், 30 பேரிடம் தலா ரூ.2000-மும் என மொத்தம் ரூ.90 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு, வங்கியில் செலுத்திவிட்டு வருவதாக கூறி புறப்பட்டுள்ளார் குமார். அவரின் இந்த நடவடிக்கையின் மீது சந்தேகம் கொண்ட வேன் டிரைவர் பசுபதிராஜ், தானும் அவருடன் வருவதாக கூறி குமாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
வங்கிக்கு அருகில் சென்றதும் பசுபதிராஜை வண்டியைவிட்டு இறங்க சொன்ன குமார், செல்போனில் பேசியபடியோ வாகனத்தை மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். விரட்டிச் சென்று அவரை பிடிக்க முயன்ற போதும் குறுக்கும் நெடுக்குமாக இருந்த தெருக்களில் பகுந்து அவர் தப்பித்துச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வேன் டிரைவர் பசுபதி, அக்கிராம மக்களிடம் இச்செய்தியை கூறி அனைவரும் ஒன்றாக சேர்ந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை முதற்கட்ட நடவடிக்கையாக குமாரின் புகைப்படத்தையும், அவர் தப்பிச் செல்ல உபயோகப்படுத்திய வாகனத்தின் எண்ணை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.