தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கை பாசத்தால் கொலைக்குற்றவாளியான அண்ணன்: தூத்துக்குடியில் அரங்கேறிய சம்பவம்! - திருமணம்

தங்கையை திருமணம் செய்து துன்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அண்ணன், தங்கையின் கணவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 17, 2023, 3:58 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் சிவசூர்யா. கட்டடப் பணியாளராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த இரண்டு மாத காலத்தில் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் முத்துலட்சுமியை கணவர் சிவசூர்யா அடித்து, துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை சாத்தான்குளம் காவல் நிலையத்திலும், திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்திலும் முத்துலட்சுமி குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். அங்கு இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதற்கு இடையில் கடந்த வாரம் சிவசூர்யாவுக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முத்துலட்சுமி தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சிவசூர்யா சாத்தான்குளம் பகுதியில் உள்ள செட்டியார் கீழத் தெருவில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து அதில் குடியிருந்து வந்துள்ளார். இந்தநிலையில் வழக்கம்போல், நேற்று கட்டடப்பணி முடித்துவிட்டு இரவு சிவசூர்யா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த முத்துலட்சுமியின் சகோதரர் வெங்கடேசன், சிவசூர்யாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது, முற்றிப்போகவே வெங்கடேசன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவசூர்யாவின் கழுத்து, தலை, கை மற்றும் உடல்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை தொடர்ந்து வெங்கடேசன் அந்த வீட்டை வெளியே பூட்டி வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதற்கிடையில் சிவசூரியாவின் நண்பர், அவரது செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தொடர்பு கொள்ள முடியாததால், வீட்டிற்கு சென்று நேரில் பார்க்கலாம் என அவர் அங்கே சென்றுள்ளார். அப்போது, வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் சிவசூர்யா துடிதுடித்துக் கொண்டிருந்துள்ளார். இதைப் பார்த்த சிவசூர்யாவின் நண்பர், சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸை வரவழைத்து சிவசூர்யாவை சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் வைத்து சிவசூர்யா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சாத்தான்குளம் போலீசார் குற்றவாளியான முத்துலட்சுமியின் சகோதரர் வெங்கடேசனை வலை வீசித் தேடி வருகின்றனர். தனது தங்கையை திருமணம் செய்து துன்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அண்ணன், தங்கையின் கணவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நாளைய வாக்காளர்களே... புதிய தலைவர்கள் வருகிறார்கள் - நடிகர் விஜய் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details