தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக சுவடியியல் அறிஞர் பேராசிரியர் சூ. தாமரை பாண்டியன், ஆய்வாளர் சந்தியா ஆகியோர் ஓலைச் சுவடிகளை பார்வையிட்டனர்.
பின்னர் ஓலைச்சுவடிகள் குறித்து சுவடியியல் அறிஞர் பேராசிரியர் சூ. தாமரை பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறைத் துறையின்கீழ் இயங்கக்கூடிய சுமார் 46 ஆயிரம் திருக்கோயில்களில் இருக்கக்கூடிய ஓலைச்சுவடிகளை பராமரித்து பாதுகாத்து நூலாக்கும் திட்டத்தை முதலமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உத்தரவின் பேரில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.
தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய எல்லா கோயில்களிலும் சென்று கள ஆய்வு செய்து அங்கு இருக்கக்கூடிய ஓலைச்சுவடிகளை அடையாளம் கண்டு அந்த ஓலைச்சுவடிகளை முதற்கட்டமாக பராமரித்து இன்னும் பல நூறு ஆண்டுகள் அதை அழியாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கை செய்து கொண்டிருக்கிறோம்.
ஓலைச்சுவடிகளில் இருக்கக்கூடிய எழுத்து வடிவங்களை இன்றைக்கு இருக்கக்கூடிய, வரி வடிவத்திற்கு மாற்றி, அதை எல்லாம் புத்தகமாக மாற்றி அதை வெளியிடுவதற்கான அந்த வேலைகளையும் இன்றைக்கு சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம். இந்த திட்டப்பணிகள் தொடங்கி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகப்போகிறது. இதுவரை, சுமார் 200 கோயில்களில் கள ஆய்வு செய்துள்ளோம்.
அந்த கோயில்களில் ஏறத்தாழ சுருளை ஓலைகள் மட்டுமே ஒரு லட்சத்து 80,000க்கும் மேற்பட்ட ஓலைகள் கண்டுபிடித்து உள்ளோம். சுருளை ஓலைகள் என்பது, நிலாவனங்கள், கோயில் தானம் செய்த அந்த முறைகள் பூஜை, புனஸ்காரம் முறைகள் உள்ளிட்ட பல்வேறு செய்தி அடங்கிய சுருளை ஓலை, தான் அதிகமாக கிடைத்திருக்கிறது.
மிகப்பழமையான ஓலைச்சுவடிகளே குறிப்பாக இந்த சுவடியில் இருக்கக்கூடிய நூல்கள் ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல்கள், குறிப்பாக பன்னிரு திருமுறைகள் இலக்கியத்தில் முக்கியமான நூல்கள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட பல்வேறு நாயனார் உடைய அந்த பாடல்கள் எல்லாம் தொகுத்து இந்த ஏடுகளில் எழுதி வைத்து இருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, இந்த கோயிலில் இருக்கக்கூடிய அம்மனுடைய திருப்பள்ளி எழுச்சி, இரட்டை மணிமாலை போன்ற நூல்களும் இந்த சுவடிகளுக்குள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளோம். இதனை வளர்ச்சி சுவடிகளாகப் பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணியைத் தொடங்கி செய்து கொண்டிருக்கின்றோம்.