தூத்துக்குடி: 300 ஏழைப் பெண்களுக்கு ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருமணத்துக்கான தங்க நாணயம் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான திருமண நிதி உதவியை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், “பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயத்தில் பெண்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஈவேரா மணியம்மை நினைவு திருமண நிதி உதவித் திட்டம், விதவை மகள் திருமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை நிதி உதவியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக 300 ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தங்கம் வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக தொடர்ந்து வழங்கப்படும். தமிழக அரசு பெண்களின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி பயில, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.