கரோனா அச்சுறுத்தல் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, ஊரடங்கு அமலில் உள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதத்தின் நான்காம் ஞாயிற்றுக் கிழமையான இன்று (ஆகஸ்ட் 23), தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
முழு ஊரடங்கு முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா எனத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாநகர குருஸ் பர்னாந்து சிக்னலில் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விதிகளை மீறி வாகனங்களில் வந்தவர்களை அவர் எச்சரித்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கி, கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதையடுத்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், ஏழை மக்களுக்கு இலவச அரிசிப் பைகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், 'தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறியதாக, 7 ஆயிரத்து 981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 529 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் சில வாகனங்கள் மட்டுமே, தற்போது காவல் நிலையத்தில் வழக்குக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது வரை 27 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாதி மோதலைத் தூண்டினால் குண்டர் சட்டம் பாயும் - தூத்துக்குடி எஸ்.பி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் சாதி மோதலைத் தூண்டும் வகையில், யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர்.
மணக்கரை சம்பவத்தையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் வேறு எங்கேனும் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறோம்.
ரவுடி துரைமுத்துவின் இறுதிச் சடங்கின்போது வீச்சரிவாள் வைத்து அடக்கம் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.
இதையும் படிங்க:யூடியூப் பார்த்து கற்று கொள்ளையடித்த கல்லூரி மாணவன் கைது!