தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இன்னாசி முத்து (63). இவரது மனைவி மருதம்மாள் (53). இவர்களது மகள் விமலா, சென்னையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இன்னாசி முத்துவுக்கும், மருதம்மாளுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று (ஜன.03) இரவு மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த இன்னாசி முத்து, தனது மனைவி மருதம்மாளை வீட்டுக்குள் வைத்து கை, கால், முகம், பெண் உறுப்பு என உடலின் பல்வேறு பாகங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு, இரவு முழுவதும் அங்கேயே பதுங்கி இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காலையில் வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் மருதம்மாள் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உறவினர் சின்ன மருது என்பவர், வீட்டின் வாசல் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, உள்ளே பதுங்கி இருந்த இன்னாசி முத்து, உறவினர் சின்ன மருதுவையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் நிலைகுலைந்த சின்ன மருது, அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.