தூத்துக்குடி :தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த 28ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 3 நகராட்சி, 18 பேரூராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்கின்றன.
இதில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என பிரதான கட்சிகள் மாமன்ற உறுப்பினர் மற்றும் இதர உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடுகின்றன. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அதிமுகவை போலவே பாஜக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவைகளும் தனித்து தேர்தலை சந்திக்கின்றன.
விஜய் மக்கள் இயக்கம் தனித்து களம்
திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. கடந்த கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் புதுவரவாக தனித்து களம் கண்ட விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் 140 பேரில் 129 பேர் வெற்றி பெற்றனர். இதே உற்சாகத்தோடு, நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் தனித்து களம் காண்கிறது.
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், விஜய் மக்கள் இயக்க தென் மண்டல பொறுப்பாளருமான பில்லா ஜெகன் வெளியிட்டார்.