தூத்துக்குடி:கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், அரபிக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சியால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தன.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இன்று வரை இக்கட்டான சூழ்நிலையிலேயே இருந்து வருகிறது. இதனிடையே, மத்திய அரசு நிவாரண நிதியை சரியாக வழங்கவில்லை எனவும், வானிலை முன்னறிவிப்புகள் மீதும் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பேரிடர் நிவாரணத் தொகை இரு தவணைகளாக தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டதாக கூறினார்.
இதையடுத்து சீரமைப்புக்கான நிதியை ஒதுக்குவதில் தொடர்ந்து தமிழக அரசுக்கும், மத்திய நிதியமைச்சருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (டிச.26) தூத்துகுடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாக, அவரது அலுவலகம் முன்னதாக வெளியிட்டுள்ள X பதிவில் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: 'ஊழல் வழக்குகளில் சிக்கும் திமுக அமைச்சர்களுக்கு புழல் சிறையில் தனி பிளாக்' - அண்ணாமலை விமர்சனம்
அந்த வகையில், தற்போது விமானம் மூலம் மதுரை வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தார். இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்பட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து, பிற்பகல் 2 மணியளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
அந்த வகையில் இன்று அவர் மழையால் பாதிக்கப்பட்ட கோரப்பள்ளம், அந்தோணியார்புரம், முறப்பநாடு கூட்டு குடிநீர் திட்டம், பொன்னன்குறிச்சி, மனதி, ஏரல், ஏரல் நகர பஞ்சாயத்து, தெற்கு வாழவல்லான் ஆகிய பகுதிகளை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்வையிட உள்ள பகுதிகள்:குறிப்பாக கோரப்பள்ளம் பகுதியில் உள்ள தொட்டி கட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அந்தோணியார்புரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள சேதம், முறப்பநாடு கூட்டு குடிநீர் திட்டத்தில் தலைமைப் பணிகள் பம்பிங் ஸ்டேஷன் சேதம், பொன்னன்குறிச்சி பகுதியில் ஏற்பட்டுள்ள வீடுகள் மற்றும் கட்டட சேதங்கள் ஆகியவற்றை பார்வையிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் மனதி பகுதியில் உள்ள திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையேயான சாலையில் ஏற்பட்டுள்ள சேதம், ஏரல் நகர பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதம், ஏரல் அப்ரோச் ரோடு டன் மேம்பாலத்தின் சேதம், தெற்கு வாழவல்லான் பகுதியில் உள்ள இபி டவர் சேதம் மற்றும் தாமிரபரணியில் ஏற்பட்டுள்ள சேதம் ஆகியவற்றை அவர் நேரில் பார்வையிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் அவருக்கு எதிராக ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அவரது வருகை, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!