தூத்துக்குடி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாகச் சென்னைதேனாம்பேட்டையில் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, டெக்கு, மலேரியா, கரோனா போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சிற்கு மாநில அளவில் மட்டும் அல்லாமல் மத்தியிலிருந்தும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இது குறித்து அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் , “சென்னையில், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் பிழைப்புவாதிகள் நடத்திய கூட்டமொன்றில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல, இரண்டும் ஒன்றுதான். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பேசினார்.
அவருக்குப் பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இவர்களது நோக்கம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை. ஆனால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய அதே கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதும், இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமலிருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை அவர் இழந்து விட்டார். இன்னும் ஒரு வாரக் காலத்தில், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சேகர்பாபு பதவி விலக வேண்டும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை? வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், சேகர்பாபு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11 ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனப் பதிவிட்டு உள்ளார்.
சனாதனம் குறித்துப் பேசியதைத் திரும்பவும் பேசுவேன்: இந்நிலையில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்னையிலிருந்து தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்தார். அப்போது அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நேற்று முந்தினம் அந்த நிகழ்ச்சியில் பேசியதை தான் திரும்ப திரும்ப பேசுவேன், இன்னும் அதிகமாக பேசுவேன்.