தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேட்டி தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் 26வது ஆட்சியராக 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த செந்தில்ராஜ், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தின் 27வது புதிய ஆட்சியராக செங்கல்பட்டு சார் ஆட்சியராக பணிபுரிந்து வந்த லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், இன்று (அக்.20) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியராக லட்சுமிபதி பதவி ஏற்றுக் கொண்டார். தூத்துக்குடி ஊரக வளர்ச்சி முகமையின் உதவி ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் புதிய மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் கூறுகையில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் 10 தாலுகா, 12 ஊராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சி, 18 பேரூராட்சிகள் உள்ளடக்கிய மாவட்டமாக தூத்துக்குடி உள்ளது. அனைத்து பகுதிகளின் வளர்ச்சிக்குத் தேவையான ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கோள்ளப்படும்.
அடிப்படை பிரச்னையான குடிநீர், சாலை, பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை மேம்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். பொதுமக்கள் இணையதளம் வழியாக பெறப்படும் சான்றிதழ்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள், விவசாயிகள் குறைகள், மாற்றுத் திறனாளிகளின் மனுக்கள் இவை அனைத்தும் விரைவாகவும், உரிய முறையிலும் தீர்வு காணப்படும்.
குறிப்பாக, அரசின் பல்வேறு முதன்மை திட்டங்கள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, மேம்பாட்டுத் திட்டம், பள்ளியில் காலை உணவுத் திட்டம் ஆகியவை முறையாக சென்றடைகிறதா என ஆய்வு செய்யப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை, பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த மாவட்டம். மேலும், காவல் துறையுடன் இணைந்து சட்டம், ஒழுங்கு முறையாக கண்காணிக்கப்பட்டு போதைப் பொருள்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க:திருச்செந்தூரில் கடத்தப்பட்ட குழந்தை கிடைத்ததால் குறவன் வேடமணிந்து பெற்றோர் வேண்டுதல்!