தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எட்டுத்திக்கும் ஒலித்த பறை ஒலி' - ஊரடங்கு காலத்திலும் அங்கீகாரத்திற்காக போராடும் திருநங்கைகள்! - Folk Dances

தூத்துக்குடி: சுனாமி காலனி ஒத்தவீடு பகுதியில் ஒன்றன்பின் ஒன்றாக தொடங்கி ஒரே கோர்வையில் எட்டுத்திக்கும் ஒலிக்கும் அளவுக்கு பறையாட்டம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த திருநங்கைகளை பார்த்தபோது, ''இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது'' என்ற பிரபசஞ்சனின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

transgender-transformation-as-folk-artist-in-thoothukudi
transgender-transformation-as-folk-artist-in-thoothukudi

By

Published : Aug 28, 2020, 1:48 PM IST

Updated : Aug 31, 2020, 11:56 AM IST

உலகப் போக்கில் நிகழ்ந்து வருகின்ற பெரும்பாலான மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்ற மனித சமூகம், இயற்கையாக உடற்கூறில் நிகழும் மாற்றத்தின் விளைவாக உருவாகும் மாற்றுப்பாலினத்தவர்களை மட்டும் இன்றுவரை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறது.

ஆண், பெண் என்னும் இருபாலரைக் கடந்து திருநங்கையர் என்னும் மூன்றாம் பாலினத்தவர்களின் அடிப்படை தேவைகளையே நம் சமூகம் எண்ணிப் பார்க்கத் தயங்குகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பலரும் உணவுக்கே திண்டாடினர். பலரது வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியது. இதில் பெரும் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் திருநங்கைகள்.

ஆனால், அனைத்து சமூக புறக்கணிப்புகளையும் கடந்து தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து வந்துள்ளார்கள் திருநங்கைகள். இவ்வளவு நாள்களாக மனிதர்களிடையே அங்கீகாரத்திற்காகப் போராடியவர்கள், பல துறைகளிலும் வெற்றிபெற்றுள்ளார்கள். எழுத்து, இசை, தொழில்நுட்பம், சமூகப் பணி எனப் பலரும் அவர்களில் தடம் பதித்துள்ளார்கள்.

கிராமியக் கலைப் பயிற்சியில் ஈடுபடும் மூன்றாம் பாலினத்தவர்

தனக்கென ஒரு அடையாளம், ஒரு அங்கீகாரம், உரிமை ஆகியவை இல்லாமல் மதிப்புடன் இந்தப் பூமியில் எந்த மனிதரும் வாழ முடியாது. அந்த அடையாளத்திற்காக கரோனா காலத்திலும் திருநங்கைகள் போராடி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 15 திருநங்கைகள் கரோனா காலத்தில் பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைகளைக் கற்று வருகின்றனர்.

தூத்துக்குடி சுனாமி காலனி ஒத்தவீடு பகுதியில் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடங்கி ஒரே கோர்வையில் எட்டுத்திக்கும் ஒலிக்கும் அளவுக்கு பறையாட்டம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த திருநங்கைகளை பார்த்தபோது, ''இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது'' என்ற பிரபசஞ்சனின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

திருநங்கைகள் கலைப் பயிற்சியில் ஈடுபட முக்கிய காரணமாக அமைந்த திருநங்கை விஜியிடம் பேசினோம். அவர், '' திருநங்கைகள் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்ற வேண்டும். கிராமியக் கலைஞர்களாக எங்களை அடையாளப்படுத்தும்போது, மற்றவை மறைந்துபோகும் என நம்புகிறோம்'' என்று நம்பிக்கையுடன் கூறினார்.

அங்கீகாரத்திற்காக போராடும் திருநங்கைகள்

2008ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் முதல்முறையாக திருநங்கைகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. அந்த ஆட்சிக்குப் பின், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சில அங்கீகாரங்கள் ஆங்காங்கே கிடைத்தன. ஆனால், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள், அந்த நலவாரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதனால், திருநங்கைகளின் முன்னேற்றம் தேங்கிய நிலையிலேயே இருந்தது.

ஆனால், கரோனா ஊரடங்கு மூன்றாம் பாலினத்தவர்களை கிராமியக் கலைஞர்களாக மாற்றியுள்ளது. வருமானமின்றித் தவித்த திருநங்கைகள், ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்ற நினைத்துள்ளனர். இதனால் முதற்கட்டமாக கலை ஆர்வம் கொண்ட 15 திருநங்கைகள் இணைந்து பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட கிராமியக் கலைகளை கற்று வருகின்றனர்.

ஆண், பெண், சிறுவர், சிறுமியர், மாணவர்கள் எனப் பயிற்சியளித்து வந்த பயிற்சியாளர் சங்கர், தற்போது திருநங்கைகளுக்கும் பயிற்சியளித்து வருகிறார். முதன்முதலாக திருநங்கைகளுக்குப் பயிற்சியளித்த அனுபவம் பற்றி அவரிடம் கேட்டோம். அவர், ''வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அனைவரும் 10 நாள்களில் நன்றாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர். சமூதாயத்தில் கலைத்திறன் மூலம் நல்லதொரு மாற்றத்தை இவர்களால் உருவாக்க முடியும். அவர்கள் குறித்த சமூகத்தின் பார்வையை கிராமியக் கலையால் மாற்ற முடியும். திருநங்கைகளும் நமக்கு உடன்பிறந்த சகோதர சகோதரிகள் தான் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பயிற்சியைத் தொடங்கியுள்ளோம்'' என்றார்.

2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அன்பு அறக்கட்டளையின் மூலம் 'சகி' கலைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதற்கட்டமாக 15 திருநங்கைகள் பயிற்சியை முடித்துள்ளனர். சமீபத்தில் ஒரு வாரத்திற்கு முன்னதாக பயிற்சியை முடித்த திருநங்கைகள் மஞ்சள்நீர் கால்வாயில் தங்களின் முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளனர்.

கிராமியக் கலைப் பயிற்சியில் ஈடுபடும் மூன்றாம் பாலினத்தவர்

சமூகத்தின் மீதான பார்வை மாறிவரும் சூழலில், அரசு சார்ந்த விழாக்களில் தொடர்ந்து வாய்ப்பளித்து மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்வாதாரத்தையும் மாற்ற வழிவகை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆண்களுக்கான உரிமை, மகளிருக்கான உரிமை, மாணவர்களுக்கான உரிமை, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமை என்று தனித்தனியே பார்க்காமல், மனித உரிமையே முக்கியம் என்று பார்க்க பழகுவோம். வரும் காலங்களில் பாலின வேறுபாடுகளைக் கடந்து சமூக மேம்பாட்டிற்காக அனைவரும் இணைந்து நடப்போம்...!

இதையும் படிங்க:நம்பிக்கை மனிதி: பூரண சுந்தரி ஐஏஎஸ்...!

Last Updated : Aug 31, 2020, 11:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details