தூத்துக்குடி இனிகோ நகர் கடற்பகுதியில் இறந்த நிலையில் பெரிய மீன் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக மன்னார் வளைகுடா உயிர்க்கோள வனசரக காவல் துறையினருக்குத்தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் துறையினர்கடற்கரைக்கு வந்து பார்த்ததில் சுமார் ஆறு அடி நீளமுள்ள திமிங்கல சுறா ஒன்று உடல் முழுவதும் காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் குழுவினர் வரவழைக்கப்பட்டு கரை ஒதுங்கிய திமிங்கல சுறா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கடற்கரை கரையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
இது குறித்து வனச்சரக ரேஞ்சர் ரகுவரன் கூறுகையில்,'தூத்துக்குடியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மீன்- திமிங்கல சுறா வகையைச் சேர்ந்தது. மீன் இன வகைகளில் மிகப் பெரியது. இவை அதிகபட்சம் 30 மீட்டர் நீளம்,30 டன் எடை வரை வளரக்கூடியது. தற்போது இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மீன் 6 அடி நீளமும், 1 டன் எடை கொண்டது. இவை 80 முதல் 90 ஆண்டுகள் வரை வாழக் கூடியது. தூத்துக்குடியில் கரை ஒதுங்கிய மீனுக்கு 5 வயது இருக்கலாம். இவை வேட்டை தடுப்பு இனங்கள் பட்டியலில் உள்ளது. பொதுவாக மன்னார் வளைகுடாவின் ஆழ் கடலில் வசிக்கக்கூடியது.
மருத்துவக்குழுவினரின் மருத்துவ பரிசோதனை தகவல்படி ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் விசைப்படகின் புரப்பலர் (நீருக்கு அடியில் சுழலும் மோட்டார்) பலமாக தாக்கியதில் காயம்பட்டு திமிங்கல சுறா உயிரிழந்திருப்பதுதெரியவந்துள்ளது.
நேற்று இரவே இந்த மீன் உயிருக்கு போராடிய நிலையில் கரை ஒதுங்கியது. இதைத் தொடர்ந்து உடனடியாக மீனை மீட்டு ஆழ்கடலுக்கு கொண்டு சென்று விட்டுவிட்டு வந்தோம். இந்த நிலையில் இன்று காலையில் இறந்தநிலையில் திமிங்கல சுறா கரை ஒதுங்கியது வருத்தமளிக்கிறது'எனக் கூறினார்.