தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் மற்றும் விளாத்திக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் நட்சத்திர வேட்பாளரும், திமுக மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரிக்கு எதிரே உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மதியம் 12.30 மணிக்கு ஆய்வு செய்தார்.
போலீசார் தொண்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்- கனிமொழி - DMK candidate kanimozhi
தூத்துக்குடி: பாஜகவினர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜுவால் முடுக்கி விடப்பட்ட காவல்துறையினர் திமுக தொண்டர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் என தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அப்பொழுது அவர், வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களின் வருகை மற்றும் வாக்குப்பதிவு விவரங்கள் குறித்து பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களின் விவரங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு திமுக வேட்பாளர் கனிமொழி பேட்டியளித்தார். அதில் தமிழ்நாடு முழுவதும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தமிழிசை மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜுவால் முடுக்கி விடப்பட்ட காவல்துறையினர் திமுக தொண்டர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். ஆனால், அதையும் தாண்டி எங்களது கழகத் தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். தேர்தல் ஆணையம், தொடர்ந்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு இன்னும் சிறப்பான வசதிகளை செய்திருக்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டுள்ளது. வளர்ந்துவிட்ட நாடுகள் கூட வாக்குப்பதிவு இயந்திரத்திலிருந்து வாக்குச்சீட்டுக்கு மாறிவிட்டன. ஆனால், இந்தியாவில் மட்டுமே பாஜகவினர் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமாக வாக்குப்பதிவை மேற்கொள்ள வேண்டும் என பிடிவாதம் பிடிப்பது ஜனநாயகத்தின் மீது அச்சத்தையும், நம்பிக்கையின்மையும் ஏற்படுத்துவதாக உள்ளது. ஜனநாயகம் என்பது சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும்.
விரைவில் வாக்கு சீட்டு மூலமாக வாக்குப்பதிவு மேற்கொள்ளும் முறையை கொண்டுவர வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம். வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக நேரம் தரகேட்டுள்ளோம். அலுவலர்கள் அது குறித்து உரிய பதில் அளிப்பதாகக் கூறி இருக்கிறார்கள் என்றார். பேட்டியின்போது கீதாஜீவன் எம்எல்ஏ கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.