தூத்துக்குடி வ.உ.சி. சந்தைப் பகுதியில் இன்று காலை 7 மணி அளவில் பாஜக வேட்பாளர் தமிழிசை தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
'தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சியை தடுக்க கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார் கனிமொழி' - பாஜக வேட்பாளர் தமிழிசை
தூத்துக்குடி: திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார் என அத்தொகுதியின் பாஜக வேட்பாளர் தமிழிசை தெரிவித்தார்.
அப்போது அவர், 'திமுக வேட்பாளர் கனிமொழி வேண்டுமென்றே பல தவறான கருத்துகளை பரப்பிவருகிறார். இந்தி திணிக்கப்படுவதாக கூறுகிறார். ஆனால் இந்தி எங்கும் திணிக்கப்படவில்லை. அதுபோல் நீட் தேர்வு விஷயத்தைப் பற்றி பேசுகிறார். நீட் தேர்வு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
திமுக-காங்கிரஸ் கட்சிகள் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்பதை ஏழை மக்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். மத்திய அரசு எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என கனிமொழி குற்றம்சாட்டி வரும் நிலையில், திருநெல்வேலியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வணிக வளாகத்தின் மூலம் தூத்துக்குடியும் பயன்பெறும் என பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் ஒரு வணிக வளாகம் கட்ட வேண்டும் என கோரிக்கையை விடுத்து என்னால் நிறைவேற்றித் தர முடியும். தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே கனிமொழி கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார். துருதிர்ஷ்டவசமாக நடந்த ஒரு நிகழ்வை வைத்துக்கொண்டு அடுக்கடுக்கான பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தூத்துக்குடியில் வளர்ச்சியை தடுக்க முற்படுகிறார்' எனக் கூறினார்.