துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சட்டப்பேரவை அலுவலகத்தில் தமிழ்நாடு செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் கழுகுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.
இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பருவமழை குறைந்ததன் காரணமாக இன்றைக்கு நிலத்தடி நீர் குறைந்துள்ளது; இது இயற்கையானது. இரண்டு வருடங்களாக தொடர்ந்து நமக்கு பருவமழை சராசரி அளவை எட்டாத நிலையில், நாடு முழுவதும் பெருகி வருகின்ற மக்கள் தொகை பெருக்கம், நகரில் அதிகரித்துவரும் வீடுகளின் வளர்ச்சி, போன்றவையின் காரணமாக, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதற்கட்டமாக ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்கும் பணியை செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வைப்பாற்றில் விரைவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விரைவிலேயே வைப்பாற்றில் 65 எம்.எல்.டி. அளவிற்கு குடிநீரைப் பெறுவதற்கு உண்டான திட்டம் மிக விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது. அத்திட்டம் வரும்போது நமது மாவட்டம் முழுவதும் இருக்கின்ற தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு சரியான திட்டமாக இருக்கும்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி கோவில்பட்டி நகரின் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக இரண்டாவது பைப்லைன் திட்டம், அதைப் போன்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு 292 கோடி ரூபாயில் நான்காவது பைப்லைன் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு கோவில்பட்டி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்னை இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.
அதுமட்டுமல்லாது ரூ.106 கோடியில் 248 கிராமங்களுக்கான குடிநீர் திட்டம் 98% நிறைவு பெற்றிருக்கிறது. இப்போது போர்க்கால அடிப்படையில் தேவையான இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், பொதுப்பணித் துறை , ஊரக வளர்ச்சித் துறை கண்மாய்களில் கிணறு அல்லது போர் அமைத்தும் தண்ணீர் வழங்குவதற்காக ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கலந்துகொள்கின்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.