தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தொழிற்சாலை இயங்கிவருவதாக கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அரிகண்ணன், இசக்கிராஜா இது குறித்து விசாரிக்கையில் கோவில்பட்டியிலிருந்து பருவக்குடி செல்லும் சாலை வழியாக ஆட்டோவில் பட்டாசுகள் கைமாற்றப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் பருவக்குடி செல்லும் சாலையில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலர்கள் அந்த ஆட்டோவை நிறுத்தி அதனை சோதனையிட்டபோது அதில், மூன்று ராக்கெட் பட்டாசு பெட்டிகள், 100 சீனி வெடி தயார் செய்ய பயன்படுத்தப்படும் காலி வளையங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்தவரிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர். இதில் கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாணிக்கராஜாதான் தன்னை இப்படி செய்யச் சொன்னதாக கூறிய அவர் மேலும், புளியங்குளம் கிராமத்தின் அருகே ஒதுக்குப்புறமாக உள்ள காலி இடத்தில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யும் தொழிற்சாலை நடத்திவருவதாகவும் கூறியுள்ளார்.
காவலர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பட்டாசு தயாரிக்க பயன்படும் குளோரேட், கரி மருந்து, நான்கு சீனி வெடி பெட்டிகள், 25 கருந்திரி திரிதட்டு உள்ளிட்ட இரண்டு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
அனுமதியின்றி பட்டாசு தொழிற்சாலை நடத்திய பிரபல ரவுடி இது தொடர்பாக மாணிக்க ராஜாவை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் மாணிக்கராஜா மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.