தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வசவப்பப்புரம், வல்லநாடு, செக்காரக்குடி, சவலாபேரி, ஒட்டநத்தம், ஓசனூத்து உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை நேற்று மேற்கொண்டார்.
'ஸ்டாலின் - தினகரன் கூட்டால் அதிமுகவின் வெற்றி தடுக்கப்படுகிறது..!' - எடப்பாடி புலம்பல்
தூத்துக்குடி: அதிமுக வேட்பாளரின் வெற்றி வாய்ப்பைத் தடுக்கும் வகையில் தினகரன், ஸ்டாலினுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அப்போது பேசிய அவர், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரின் பேராசை மற்றும் சுயலாபத்திற்காகவும் வெளியில் சென்றதால் இடைத்தேர்தலை சந்திக்கிறோம். அவருக்கு தேர்தல் மூலமாக தகுந்த பாடம் புகட்ட வேண்டும். டிடிவி தினகரனுக்கு அதிமுகதான் விலாசத்தைத் தேடிக் கொடுத்தது. ஆனால், வழக்கு போட்டு இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைக்கிறார். இப்போது திமுகவுடன் ரகசிய உடன்படிக்கை வைத்துக்கொண்டு, அதிமுக வேட்பாளரின் வெற்றியை தடுக்கப் பார்க்கிறார்.
மத்திய அரசிடம் எடுத்துக்கூறி அரசு கேபிள் டிவி கட்டணத்தை பழையபடியே ரூ.100 ஆக குறைக்கப்படும். ஸ்டாலின் குடும்பத்தினர்தான் அனைத்து டிவி சேனல்களையும் வைத்துக் கொண்டு மக்களிடம் இருந்து பணத்தை உறிஞ்சி, அவர்களின் கஜானாக்களை நிரப்பி வருகின்றனர். அதை தடுக்கிற கட்சியாகவும், ஆட்சியாகவும் அதிமுக இருக்கும். நான்கு நாட்கள் வெயிலில் அலைந்ததை கூட தாங்காத ஸ்டாலின், 40 நாட்கள் வெயிலில் கிடந்தால் பதவியே வேண்டாம் என்று ராஜினாமா செய்து விட்டு போய் விடுவார், என்று கிண்டலடித்தார்.