தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா.. தேரை வடம்பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்! - இன்றைய முக்கிய செய்திகள்

Tiruchendur Temple Avani Festival Chariot: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் தேரை வடம்பிடித்து இழுக்க வெகு விமரிசையாக நடைபெற்றது.

Tiruchendur Temple Avani Festival Chariot
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 10:55 AM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோயிலில் நடக்கக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணித் திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இருவேளைகளில் சுவாமியும் அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஐந்தாம் திருவிழா அன்று இரவு 7:30 மணிக்குக் குடைவரை வாயில் தீபாராதனையும், 7ஆம் திருவிழா அன்று காலை சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்திலும், மாலையில் சிவப்பு சாத்தி கோலத்திலும், 8ஆம் நாள் திருவிழா அன்று நண்பகல் பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ஆம் நாள் திருவிழாவான இன்று (செப். 13) தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்தி: 10,008 ருத்ராட்சங்களால் ஆன ருத்ர நடராஜ விநாயகர் சிலை

தொடர்ந்து காலை 6:00 மணிக்குத் தேரோட்டம் நடைபெற்றது. முதலில் விநாயகர் தேர் புறப்பட்டு நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையம் வந்தடைந்தது. பின்னர் சுவாமி குமர விடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய தேரானது நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையம் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து வள்ளியம்மாள் எழுந்தருளிய தேரானது நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையம் வந்தடைந்தது.

இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளைக் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். மேலும், திருச்செந்தூர் உட்கோட்ட டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் சுமார் 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதையும் படிங்க:விநாயகர் சிலைகள் கரைப்பதை கண்காணிக்க குழு - தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details