ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாத யாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து அலகு குத்தி, அங்கபிரதட்சணம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருச்செந்தூர் கடற்கரையே தெரியாத அளவிற்கு, குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணியளவில் விஸ்வரூப தீபாராதனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேக தீபாராதனையும் பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.