தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராமத்தில் மக்கள் 100 நாட்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் அந்தந்தப் பகுதிகளில் இருந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நூறாம் நாள் போராட்ட தினமான மே 22ஆம் தேதி அன்று பனிமய மாதா ஆலயத்தில் இருந்து பேரணியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்தனர்.
காவல் துறை சார்பில் இந்தப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தடையை மீறி இந்தப் பேரணியானது நடைபெறும் என ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. 2018 மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து பேரணிவரும் என அறிவிக்கப்பட்ட சாலைகளில் காவல் துறையினர் தடுப்புகளை அடுக்கி வைத்து பேரணி ஆட்சியர் அலுவலகம் சென்று அடையாதவாறு பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் கலவரத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 11-ம் வகுப்பு மாணவி ஸ்னோலின் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறும் நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியையுமான பாத்திமா பாபு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து அஞ்சலி கூட்ட நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தார்.