தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு முன்பாகவே, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு இரண்டாவது காப்பர் ஆலை அமைக்க சட்டவிரோதமாக நிலம் வழங்கியதாக புகார் எழுந்தது. நெல்லையைச் சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் முத்துராமன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புகார் கொடுத்ததின் பேரில் மத்திய சுற்றுசூழல் அமைச்சக குழு அப்பகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. இதன்படி மத்திய சுற்றுச் சூழல் அமைச்சக இயக்குனர் கலியபெருமாள், ஆராய்ச்சியாளர் பிரிஜிலால் தலைமையிலான குழு, நேற்று ஆய்வு செய்தனர்.
ஸ்டெர்லைட்: 2ஆவது ஆலை கட்டப்படும் இடத்தில் மத்தியக் குழு ஆய்வு
தூத்துக்குடி: இரண்டாவது சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு முன்பாக ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மத்திய சுற்றுச்சூழல் குழு ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வுக் குழுவினர்,ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக வழங்கப்பட்ட இடத்தில் அடிப்படை கட்டுமானப் பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. தற்போது எந்த வேலையும் நடைபெறவில்லை என்றனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன், சிப்காட் விரிவாக்கத்திற்காக மொத்தம் 1,616 ஏக்கர் நிலம் கோரப்பட்டுள்ளது. இதில் 1242 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நகர் ஊரமைப்புத்துறை உள்ளிட்டவற்றின் அனுமதி எதுவும் இல்லாமலேயே தூத்துக்குடி சிப்காட் அமைப்பானது 324 ஏக்கர் நிலத்தை ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு வழங்கியுள்ளது. ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையினுள் கட்டுமானப் பணிகள் நடந்திருப்பது உண்மைதான் எனக் கூறியுள்ளனர். இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.