தூத்துக்குடி:புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சவலப்பேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் துறை சார்பாக சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் முன்னிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், “கிராமங்களில் எந்த வித சண்டை சச்சரவும் இல்லாமல் மக்கள் அமைதியான முறையில் இருப்பதற்கும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என யாரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தங்களது எதிர்காலத்தை தொலைத்துவிடாமல், தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லா மாவட்டமாக மாற்றுவதுமே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும்.
இளைஞர்கள் கோபத்தினால் குற்றச் செயல்களில் ஈடுபட்டு, அவர்களது எதிர்காலத்தையே தொலைத்து விடுகிறார்கள். கோபத்தினால் குற்றச் செயலில் ஈடுபட்டு சிறை செல்பவனை விட, தனது குடும்பத்திற்காக தன்னை கட்டுப்படுத்தி பிறரிடம் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருப்பவன்தான் உண்மையான வீரன் ஆவான். கோபப்பட்டு குற்றச் செயலில் ஈடுபடுபவன், அவனது எதிர்காலத்தை இழப்பதோடு, அவனது குடும்பமும் பாதிப்படையும்.
அதனால் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு நேர்மறையான சிந்தனைகளை வளர்க்க கற்றுக் கொடுங்கள். உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் கோபத்தைக் குறைத்து நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள உதவுங்கள். அப்போதுதான் சமுதாயம் நல்ல முறையில் வளர்ச்சியடையும். உங்கள் குழந்தைகள் எவ்வித சூழ்நிலையிலும் கல்வி பயில செய்யுங்கள். கல்வி ஒன்றுதான் அவர்களுக்கு பெற்றோர் அளிக்கும் மிகப்பெரிய சொத்தாகும்.
பழிக்குப்பழி என்ற எண்ணம் ஒரு குடும்பத்தை மட்டுமல்லாது ஒரு தலைமுறையையே அழித்துவிடும். பழிக்குப்பழி என்ற எண்ணத்தை கைவிட்டு, சாதி வேறுபாடுகளைக் களைந்து அனைவருடனும் ஒற்றுமையாக வாழ்ந்து, இந்த சமுதாயத்தை நல்ல முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.