தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திலும், பிற நாள்களிலும் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் உத்தரவு, தொழில் கடன், முதியோர் உதவித்தொகை, கணவனை இழந்த பெண்ணுக்கான உதவித்தொகை என பல மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
குறைகளை மனுவாக எழுதி தர இலவச ஏற்பாடு: இந்த நிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மரத்தடிகளில் அமர்ந்து மனுக்களை எழுதிக்கொடுத்து வந்தவர்களை கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆட்சியர் செந்தில்ராஜ் "மனு எழுதிக் கொடுக்க இனிமேல் யாரிடமும் பணம் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். வாகனங்கள் நிறுத்துமிடம் அருகில் மனு எழுதுவற்கு இடம் ஒதுக்கித் தருவதாகவும், உங்களுக்கு ஊதியமாக குறிப்பிட்டத் தொகையை, ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து வழங்குவாகவும்" கூறியுள்ளார். மேலும், இதைக் கண்காணிக்க இரண்டு வருவாய் ஊழியர்களையும், பாதுகாப்புக்கு ஒரு காவலரையும் நியமித்து இருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து, ஆட்சியர் கி. செந்தில்ராஜ் ஐஏஎஸ் கூறியது போன்றே, ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரேயிருக்கும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 12 மேஜைகள், நாற்காலிகள் போடப்பட்டு மனு எழுதுவதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. இலவசமாக மனு எழுதுமிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு மனு எழுத வரும் பொதுமக்கள் வரிசையில் நின்று மனுக்களை எழுதி வாங்கி ஆட்சியர், அதிகாரிகளிடம் கொடுத்து வருகின்றனர்.
ஆட்சியரை பார்க்கவிடாமல் தடுக்கும் போலீசார்?: இதற்கிடையே, மனு அளித்து வரும் பொதுமக்களுக்கு, மனு எழுதுமிடத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி இல்லை. குழந்தைகளை அழைத்து வரும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கிராம பிரச்னையை கருத்தில் கொண்டு அக்கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் வருகின்றனர். ஆனால், போலீசார் ஆட்சியரை பார்க்க 5 பேரை மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். மீதம் உள்ளவர்கள் வெளியே நிற்கின்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.