தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடனைத் திருப்பித் தராத நண்பனை உயிருடன் புதைக்க முயற்சி: மூவர் கைது - தூத்துக்குடி முத்தையாபுரம்

கொடுத்த கடனைத் திருப்பித் தராத நண்பனை உயிருடன் புதைக்க முயற்சி செய்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.

thoothukudi-muthaiyapuram-murder-attempt
கேட்ட கடனைத் திருப்பிக்கேட்ட நண்பனை உயிருடன் புதைக்க முயற்சி- மூவர் கைது

By

Published : Aug 26, 2021, 6:36 AM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் அஜித்குமார் (24). இவரும், முத்தையாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த தேவ ஆசீர்வாதம் (39), முள்ளக்காட்டைச் சேர்ந்த தர்ம முனியசாமி (23), இசக்கிமணி (20) ஆகியோரும் நண்பர்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அஜித்குமார், செல்போன் வாங்குவதற்காக தேவ ஆசீர்வாதத்திடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், அந்தப் பணத்தில் செல்போன் வாங்காமல் நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினமும் முத்தையாபுரம் உப்பளம் அருகிலுள்ள முள்புதர் உள்ள பகுதியில் நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது, தேவ ஆசிர்வாதம் தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டுள்ளார்.

இதனால், அஜித்குமாருக்கும், மற்ற மூன்று பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், மூவரும் அஜித்குமாரை கம்பால் அடித்து கத்தியால் தாக்கியுள்ளனர். இருந்தும் ஆத்திரம் அடங்காமல், அருகே இருந்த ஆளுயர குழிக்குள் அவரைத் தள்ளி உயிருடன் மண்ணில் புதைக்க முயற்சி செய்துள்ளனர்.

மார்புவரை மண் மூடிய நிலையில், அஜித் குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததால், தேவ ஆசீர்வாதம் உள்பட மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர், மீட்கப்பட்ட அஜித்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அஜித்குமார் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து மூவரையும் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க:குளிக்கும் போது பெண்ணை வீடியோ எடுத்த சட்ட மாணவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details