தூத்துக்குடி:தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், தூத்துக்குடியில் நேற்று (மே.15) முதல் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. ஊரடங்கை மீறி வெளியே தேவையற்று சுற்றித்திரிந்தவர்கள் எச்சரிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையல், புதிய பேருந்து நிலையம் அருகே நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் இன்று (மே.16) நடைபெற்ற வாகனத் தணிக்கையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
மேலும், வாகனத்தில் தேவையில்லாமல் ஊர் சுற்றுவதைத் தடுப்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 65 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது. மாவட்டத்தின் காவல் துணைச் சரகங்கள் ஒவ்வொன்றிலும் ஊரடங்கில் தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்ததாக 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.