தூத்துக்குடி:மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் “மாற்றத்தை தேடி” (In Search of Change) என்ற சமூக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி, பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 19), தூத்துக்குடி, முத்தையாபுரம், வேலாயுதபுரம், முறப்பநாடு, திருச்செந்தூர், கோவில்விளை, வன்னிமாநகரம், ராணிமகாராஜபுரம், அடைக்கலபுரம், தோப்பூர், ஆறுமுகநேரி, ஆத்தூர் முக்காணி, குலசேகரன்பட்டினம், மணியாச்சி, கீழ மங்கலம், மேல மங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 537 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் சாதிய அடையாளங்களை அழித்தனர்.
இதுவரை மொத்தம் 1,098 இடங்களில் இருந்த சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து அனைத்து மக்களும் இனிவரும் காலங்களில் சாதிய வேறுபாடுகள் இல்லாமல் ஊருக்குள் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் செயல்பட்டு, எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அமைதியான மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை மாற்ற வேண்டும் எனவும், சாதிய அடையாளங்களை தாமாக முன்வந்து அழித்த கிராம மக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் புளியம்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட கிராம மக்களைக் கூட்டி, அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் சமூக நல்லிணக்கம் மற்றும் மாற்றத்தை தேடி கூட்டத்தை நடத்தினார்.