முறுக்கு விற்கும் பெண்ணின் ஏழ்மையை போக்க வீடு கட்டி கொடுத்த மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி: சாத்தான்குளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த லெட்சுமி முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் கடந்த ஆண்டு முறுக்கு வாங்க வந்த நபர் ஒருவர், லெட்சுமியின் வீட்டில் மின் இணைப்பு இல்லாத நிலையில் 12ஆம் வகுப்பு படிக்கும் லெட்சுமியின் மகள் மண்ணெண்ணெய் விளக்கில் படிப்பதை வீடியோவாக மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்தினார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜும் உடனடியாக லெட்சுமி அவர்களின் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வருவாய்த் துறையினரும் மின்வாரியத் துறையினரும் விரைந்து சென்று லெட்சுமி வீட்டிற்கு உடனடியாக மின் இணைப்பு கொடுத்தனர். சிறிது நாள்களில் லெட்சுமி வீட்டிற்கு வந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் நிதிலிருந்து லெட்சுமிக்கு புதிய வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், லட்சுமியின் புதிய வீடு பால் காய்ப்பு விழா இன்று நடைபெற்றது. அந்த பால் காய்ப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மாசாணமுத்து மற்றும் தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
மின் இணைப்பு இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்கில் படித்த மாணவி, மதிப்பெண் அதிகம் பெற வேண்டும் என்பதற்காக உடனடியாக மின் இணைப்பு கொடுத்ததுடன் அவரது குடும்பத்தின் ஏழ்மை நிலை கருதி புதிய வீடு கட்டவும் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கூடங்குளத்தில் தரைதட்டிய மிதவை கப்பல்; தரை மார்க்கமாக கொண்டு வர முடிவு!