கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கை மே 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் போக்குவரத்து, தொழிற்சாலைகள், அரசுப் பணியாளர்களுக்குத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது, ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்க இருப்பதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் தேர்வு மையங்களாக மாற்றுவதற்கு ஆலோசித்து வருகிறோம். வெளியூரில் சிக்கித்தவிக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இ-பாஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு வாகன வசதி தேவைப்பட்டால் சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 40 பேர் கரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் புதிதாக 11 நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வடமாநிலத் தொழிலாளர்கள் 8 ஆயிரத்து 700 பேரை, அவர்களின் விருப்பத்தின் பேரில் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலமாக வடமாநிலத் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.