தூத்துக்குடி:குமரிக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென்மாவட்டங்களில் பேய் மழை பெய்து, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் நீர் தேங்கியது மட்டுமில்லாமல் பல்வேறு கிராமங்கள் மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டன. அதன் பின் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, தற்போது நகரமும் மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.
வெள்ளத்தின் காரணமாகக் குடிநீர் ஆதாரங்களில் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் கிருமிகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் குடிநீரேற்று நிலையங்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் குளோரினைக் கலந்து விநியோகிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, “வெள்ளத்தின் காரணமாகக் குடிநீர் ஆதாரங்களில் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் கிருமிகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் குடிநீரேற்று நிலையங்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் குளோரினைக் கலந்து விநியோகிக்க, நுகர்வோருக்குக் சென்றடையும் குடிநீரில் உள்ள குளோரின் அளவினைக் கண்காணிக்கவும், குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, குளோரின் கலந்த குடிநீர் மட்டுமே பொதுமக்களுக்கு உள்ளாட்சிகளால் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இருப்பினும் குடிநீரேற்று நிலையங்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளிலிருந்து பொதுமக்களுக்குச் சென்றடையும். குழாய்களில் உள்ள சிறு சிறு துளைகள் மூலமாகவோ அல்லது பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும் இடங்களிலோ குடிநீரில் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், குடிநீர் ஆலைகளைக் கண்காணிக்கவும் உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.