தூத்துக்குடி:ஸ்ரீவைகுண்டம், தேமாங்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு நடு கூட்டுடன்காடு கிராமத்தைச் சேர்ந்த நிஷா என்பவருக்கும் கடந்த திங்கள்கிழமை (ஜுன் 28) ஆம் தேதி திருமணம் நடந்தது.
இவர்கள் திருமண ஊர்வலத்தில் மணப்பெண் நிஷா தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், சுருள்வாள் சுழற்றி பொதுமக்கள், உறவினர்கள் மத்தியில் அசத்தினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பெண்கள் கட்டாயம் கற்க வேண்டிய கலை
இதுகுறித்து மணப்பெண் நிஷா கூறுகையில், "நான் பி.காம் படித்துள்ளேன். கடந்த மூன்று ஆண்டுகளக நான் இந்த தற்காப்புக் கலையை கற்று வருகிறேன்.
இதில் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளேன். சிலம்பம், சுருள்வாள், பறை, ஒயிலாட்டம் என அனைத்தும் கற்றுள்ளேன். அடிமுறையில் 14 உள்பட ஐயங்கார் வரிசை, சரவரிசை எனக்குத் தெரியும். நான் இவ்வளவு கற்றுக்கொள்ள முழுக்காரணம் எனது மாஸ்டர் மாரியப்பன் தான்.
சிலம்பம் சுழற்றும் மணப்பெண் நிஷா என்னுடன் சேர்த்து 80 பேருக்கு மாஸ்டர் இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறார். இந்தக் கலை என்னுடன் மட்டும் நின்றுவிடாமல் மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்க உள்ளேன். பெண்கள் கட்டாயம் இந்த தற்காப்பு கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் எனது கணவர் ராஜ்குமாருக்கு நான் இந்தக் கலை கற்றுள்ளது முன்பே தெரியும். அதனால் எங்களது திருமண நிகழ்ச்சியில் இதைச் செய்து காட்ட வேண்டும் என்று கேட்டிருந்தார். அவர் கேட்டதற்கு இணங்க நான் அதைச் செய்தேன். அங்கிருந்தவர்கள் என்னை நன்கு உற்சாகப்படுத்தினார்கள். அது எனக்கு மகிழ்ச்சியளித்தது" என்று கூறினார்.
பிறருக்கும் கற்றுக் கொடுக்க உள்ளார்
இதுகுறித்து நிஷாவின் கணவர் ராஜ்குமார் கூறுகையில், "எனது மனைவி நிஷா, எனக்கு அக்கா மகள் முறை வேண்டும். அவர் இந்த தற்காப்புக் கலைகளில் சிறந்து விளங்குகிறாள். பெண்களுக்கு தற்காப்பு கலை மிகவும் முக்கியம். எனது மனைவி நிஷா எங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு இந்தக் கலையை கற்றுக் கொடுக்க உள்ளார்" என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
இவரது இந்த வீடியோவை சுப்ரியா சாகு ஐஏஎஸ் தனது ட்விட்டரில் பகிர்ந்து நிஷாவைப் பாராட்டி உள்ளார். மேலும் பெண்கள் சிலம்பம் கற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
சுப்ரியா சாகுவின் ட்விட்டர் பக்கம் இதையும் படிங்க: வெள்ளி நீர் வீழ்ச்சியில் மஞ்சள் நிறத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்