தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சோமசுந்தரம் வீட்டில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிராஜா, பாலகிருஷ்ணன், பாண்டி, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் ஆகிய நான்கு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் நீதிமன்றக் காவலில் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்காத நிலையில், இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணம் வழங்கக்கோரி திருநெல்வேலி அரசுத் தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நேற்று அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அதன்படி இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு நிவாரணம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விஷவாயு தாக்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் அறிவிப்பின்படி இன்று நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. கழிவுநீரைச் சுத்தம் செய்வதற்காக நகராட்சியில் இயந்திரம் உள்ளது. பொதுமக்கள் முறைப்படி நகராட்சியிடம் அனுமதிபெற்று கழிவுநீரைச் சுத்தம் செய்ய வேண்டும்" என்றார்.