தூத்துக்குடி:ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை கீழுர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ளவர்களில் ஒருவர் இறந்தால், இறந்தவரை கொண்டு செல்வதற்கு பாதை இல்லாமல் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இதற்காக இறந்தவரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வயல்வெளியில் தூக்கிச்செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த வயதான முதியவர் ஒருவர் இறந்தார். அவரது உடலை கொண்டு செல்வதற்கு தற்போது நெற்பயிர்கள் வளர்ந்துள்ள வயல்வெளியில், நெற்பயிர்கள் மேல் மிதித்து அழித்து, இறந்தவர் உடலைக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திடமும், வருவாய்த்துறையினரிடமும் மனு அளித்தும் பயனில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், தங்களுக்கு நிரந்தரமாக ஒரு பாதை அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.